குறிஞ்சிப்பாடி வீரசைவ செங்குந்தர் வரலாறு

0

 முதன்மையான தமிழ் வீரசைவ குடும்பங்களில் ஒன்றான குறிஞ்சிப்பாடி ஐயர்கள் என்ற வீர சைவ செங்குந்தர்கள் வாழ்வும் வரலாறும்.


பொன்மகள் வாழ் சிங்கபுரி


இடமும்,பெயரும்


தமிழகத்து கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூருக்கும் விருத்தாசலத்துக்கும் நடுவில் அமைந்துள்ள குறிஞ்சிப்பாடியின் வடக்குப்பகுதியே சிங்கபுரி. இச்சிங்கபுரி தற்போது விழப்பள்ளம் என்று வழங்கப்படுகிறது.


கோயில் வரலாறு


ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முன் கடலூர் மாவட்டத்து குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் கிராமத்தில் வீர சைவ செங்குந்த முதலியார் குடும்பம் ஒன்று வாழ்ந்திருந்தது. அக்குடும்பம் முருகன்மேல் ஆழ்ந்த பக்தி கொண்டது. நாளும் முருக சேவையே தனது பேரின்பமாகக் கருதித் தொண்டு புரிந்து வந்தது. அக்குடும்பத்தில் காரைக்கால் அம்மையார் போன்ற ஒரு மாது சிரோன்மணி வாழ்க்கைப்பட்டார். அவருக்கு ஓர் ஆண்பிள்ளை, அப்பிள்ளைக்கு முத்தய்ய தம்பிரான் எனப் பெயரிட்டு நாளும் அன்போடு பேணி வளர்த்து வந்தார் அம்மாது. முத்துவுக்கு ஐந்தாண்டு பிராயம் நடக்கையில் பெண்ணரசியின் கணவர் சிவனடியடைந்தார். தந்தையை இழந்த முத்துவுக்கு மறுவருடத்திடல் அம்மை வார்த்தது. அது குளிர அவர் இறந்தார். முத்துவைச் சமாதி வைத்தனர். பிள்ளையை இழந்த துக்கத்தை அம்மாதினால் தாங்கமுடியவில்லை. தினமும் சமாதிக்குச் சென்று கதறியழுவார். "ஐயனே முருகா! எனக்கிருந்த ஒரு பிள்ளையும் இறந்தானே; நான் என் செய்வேன் என் பிள்ளையை உயிரோடு எழுப்பித்தா" என்று பழனிமலையானை நினைந்து உள்ளமுருக வேண்டுவார்.


ஒருநாள் அப்படி அவர் கதறி வேண்டியபோது, ஒரு பெண் அவர் முன்தோன்றி, "அம்மணி! வரும் வெள்ளிக்கிழமை குளித்து நல்லாடையுடுத்திக்கொண்டு இங்கே வந்தால் உன் குழந்தையைத் திரும்பவும் நீ உயிரோடு கண்டு பெறலாம்" என்று சொல்லி மறைந்தார்.


அதுபோலவே முத்துவின் தாயார் வெள்ளிக்கிழமை குளித்து நல்லாடை புனைந்து முருகனை வழிபட்டுப். பின் சமாதிக்கு வந்தார். அங்கே சமாதி வெடித்து இரு பிளவாகப் பிரிந்திருந்தது. அப்பிளவினுள் முத்து உயிரோடு படுத்திருந்தார்.


சமாதி வெடித்து இரு பிளவாக பிரிந்து முத்து உயிரோடு படுத்திருந்தார்


தம் பிள்ளை உயிரோடு இருப்பதைக்கண்டு அக மகிழ்ந்தார் அன்னை. ஆவலோடு மகனைத் தூக்கிக்கொண்டு வீடு வந்தார். ஊரிலுள்ளோர் அவ்வரிய காட்சியினைக் கண்டு வியந்தனர். ஆனால் சில தீயவர்கள், இவள் சமாதியிலிருந்த இறந்த குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டாள். இப்பாவக்காரி இனியும் இங்கிருந்தால் இவ்வூர் நாசமாகிவிடும் எனச் சொல்லி, மாது சிரோன்மணியை ஊர் கடத்தினர்.


மாது சிரோமணியையும், குழந்தை முத்துவையும் ஊரை விட்டு அனுப்புதல்


முத்துவோடு அவ்வன்னை ஆடூர் விட்டுக் குறிஞ்சிப்பாடிக்குச் சென்றார். ஊரின் வடக்கே ஊரோடு சேர்ந்த சிங்கபுரி என்னும் பகுதியில் ஒரு கொட்டகை அமைத்துக்கொண்டு பிள்ளையோடு அவர் வசித்தார். முத்துவுக்கு மணப்பருவம் எய்தியது. பிள்ளைக்குக் கண்குளிர திருமணத்தை நடத்தினார்.


முத்து முதலியார் மனைவி மக்களுடன் அன்னம்பாலித்தல்


சில நாட்களில் முத்து முதலியாருக்கு இரு பிள்ளைகள் தோன்றினர். மூத்தவர் சுப்பராயன், இளையவர் முருகன். இவ்விரு புதல்வர்களும் முருகன் மேல் ஆழ்ந்த பக்தி பூண்டவர்கள்.


சுப்பராய சுவாமிகள் குடும்பத்துடன் பழனியில் தங்குதல்


சுப்பராய சுவாமிகள் எந்நேரமும் பழனியாண்டவனை எண்ணி உருகிக் கொண்டிருப்பார். அவருக்கு மணப்பருவத்தில் தக்க மனையாள் கிடைக்கப் பெற்றார். அது போலவே முருக அடியாரும் தக்க மனையாளைப் பெற்று இல்லறம் புரிந்து வந்தார். அப்போது முத்து முதலியார் சிவனடி சேர்ந்தார்.


சுப்பராய சுவாமிகள் பழனிமலையான்மேல் ஏற்பட்ட பக்தி முதிர்ச்சியுற்றது. அவர் பழனிக்கே சென்று தங்கிவிட எண்ணி, அவ்வாறே மனைவியோடும் புதல்வர்களோடும் சென்றார். குடும்பத்தோடு தங்கித் தினமும் பழனியாண்டியைக் கண்குளிரக் கண்டு அங்கே தமது வழிபட்டு வந்தார். நாட்கள் சில கடந்தன.


சுப்பராய சுவாமிகள் கனவில் பழனி முருகன் தோன்றுதல்


ஒருநாள் முருகப்பெருமான் அவர் கனவில் தோன்றி, குறிஞ்சிப்பாடிக்கே திரும்பிச் செல்லும்படியும், அவ்வூரையடுத்த மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் வசிக்கும் ஒரு நெசவாளி பயன்படுத்தும் பசைக்கல்லை வாங்கி, அதில் தன்னுருவம் செதுக்கி, சிங்கபுரியில்


சுப்பராய சுவாமிகள் மீனாட்சிப்பேட்டை நெசவாளி கல்லை எடுத்து தண்டாயுதபாணியின் திருவருவம் செதுக்குதல்


கோயில் கட்டி அவ்வுருவத்தை வைத்து வழிபாடு செய்யும்படியும், அவ்வடிவத்திலேயே தாம் வந்து தங்கியிருப்பதாகவும் கட்டளையிட்டு மறைந்தார்.


சுப்பராய சுவாமிகள் சிங்கபுரியில் கோயில் கட்டி வழிபடுதல்


முருகப்பெருமானின் ஆணைப்படியே சுப்பராய சுவாமிகள் சிங்கபுரிக்கு வந்து கோயில்கட்டி முருகனை வழிபட்டார். மேலும் தாம் முருகனடிமையாகி அடிக்கடி தனியே முருகப்பெருமானோடு நேரில் பேசுவார். பிணியுற்று வந்தோருக்கு திருநீறு அளித்து குணமுறச் செய்வார்.


இப்படியிருக்கும் நாளில் ஒருநாள் மந்திரவாதி ஒருவன் ஸ்வாமிக்குப் போடப்பட்டிருந்த பந்தலை மந்திரசக்தியினால் எரித்தான். அதனை ஞானத்தால் அறிந்த சுவாமிகள் அவனுக்குத் தண்டனை கொடுக்க எண்ணினார். ஆனால் அதற்கு முன்னே முருகக் கடவுள் அம்மந்திரவாதிக்குப் பக்கப் பிளவு நோய் கொடுத்தார். அந்நோயினாலேயே மந்திரவாதி இறந்தான்


சிங்கபுரி கந்தனிடம் வள்ளற்பெருமான் வருகை


ஒரு சமயம் வள்ளலார் சத்திய ஞானசபையைக் கட்டிக் கொண்டிருந்தபொழுது, அதன் வசூலுக்காகச் சிங்கபுரிக்கு வந்தார். அப்போது குருதேவரான சுப்பராயர் சுவாமிகளைச் சந்தித்து அன்போடு அளவளாவினார். அப்போது சுவாமிகள் வள்ளல் பெருமானிடம் இவ்வாண்டு ஆடி மாதம் இடி விழுந்து ஞானசபை முன் போடப்பட்ட பந்தல் சேதமுறும் எனக் கூறினர். அப்படியே பின்னாளில் நிகழ்ந்தது.


வள்ளலாருக்குச் சிங்கபுரி கந்தன் மேல் மிகுந்த ஈடுபாடு பக்தி. அடிக்கடி அவர் சிங்கபுரி ஆண்டவனை வழிபட்டுச் செல்வது வழக்கம். ஒரு சமயம் தமது தமையனார் சபாபதி பிள்ளைக்குக் கட்டி வந்துவிட, அதனைச் சிங்கபுரிக்கு வந்து சிங்கபுரி கந்தர் திருப்பதிகம் பாடி வள்ளலார் போக்கினார்.


இவ்வாறாக சுப்பராய சுவாமிகள் சிங்கபுரியில் பழனி ஆண்டவருக்குக் கோயில் கட்டிப் பூசையும் செய்து வந்ததால் அவருக்கு ஐயர் என்ற பட்டம் கிடைத்தது. பின் அவர் பரம்பரையினரும் தமது


பெயருக்குப் பின்னால் ஐயர் என்றே வழங்கி வரலாயினர். முத்தைய்யரின் பிள்ளைகளான சுப்பராய அய்யர், முருகய்யர்


சுப்புராயசுவாமிகள் தியானத்தில்


ஆகியோரின் பரம்பரையினரே இன்றுவரை தொடர்ந்து கோயில் குருக்களாக முறை வகுத்துக் கட்டளைப் புரிந்து பூசை செய்துகொண்டு வருகின்றனர்.


சுப்புராயசுவாமிகள் ஜீவசமாதியின் மேஸ் நடராஜப்பெருமான் குருமூர்த்தமாக வீற்றிருக்கிறார்.


இறந்தபின் முருகப்பெருமானின் அருளால் உயிரோடு தோன்றிய முத்தய்யரின் சமாதி மேல்தான் இன்றும் கோயில் மூலஸ்தானம் விளங்கி வருகிறது. கோயிலினுள் நடராஜ சுவாமிக்கென சிறு கோயில் ஒன்று இருக்கிறது. அந்நடராஜர், கோயிலை ஏற்படுத்திய சுப்பராய அய்யரின் சமாதிமேல் எழுந்தருளியுள்ளார்.


ஒவ்வொரு ஆண்டும் மார்கழி கிருத்திகை தினத்தன்று சுப்புராயசுவாமிகளுக்கு முருகப்பெருமான் காட்சி அளித்தல்,


குருதேவரான சுப்பராய சுவாமிகளின் குருபூசை மார்கழி கிருத்திகையில் நடைபெறுகிறது. அன்று கோயிலில் மிகச்சிறப்பாக அப்பூசை கொண்டாடப்படுகிறது.


சுப்பராய சுவாமிகளினால் தோற்றுவிக்கப்பட்ட கோயிலாதலினால், இக்கோயில் அவர் பெயராலேயே சுப்புராயர் கோயில் என்று வழங்கப்படுகிறது.


மூர்த்தி


மூலஸ்தானத்தில் தண்டபாணி சுவாமி எழுந்தருளி உள்ளார். அவர் வேலோடு காட்சி கொண்டு அருள்பாலிக்கிறார். கோயிலின் உற்சவமூர்த்தி வள்ளி தெய்வயானையோடு ஸ்ரீ செல்வசிங்காரவேலவர் அருளாட்சி புரிகிறார்.


தலச்சிறப்பு


வள்ளலார், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் போன்ற பெருமகான்களெல்லாம் இத்தலத்தைத் தரிசித்துச் சென்றுள்ளார்கள். மற்றும் வேண்டுவோர்க்கெல்லாம் வேண்டும் அருள் தருகின்ற பழனியாண்டவரே இங்கு எழுந்தருளியுள்ளார்.


பாடிய பெரியோர்கள் - பாடல்கள்


வள்ளற்பெருமான் மட்டுமே இக்கோயிலையும் இறைவனையும் போற்றிப் பாடியுள்ளதாகத் தெரிகிறது. பாடல்கள் வள்ளலரால் அருளப்பட்ட கந்தர் திருப்பதிகம் மட்டுமே.


கோயில் அமைப்பு


மூன்று மாட இராஜகோபுரத்துடன் விளங்கும் இக்கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. சுற்றுச்சுவருக்குள்ளே முன் மண்டபத்துடன் தனியாக மூல ஸ்தான கோயில் உள்ளது. இக்கோயில் பெரிய கோயில். இதன் முன் செப்புத் தகடு வேய்ந்த கொடிக்கம்பமும், அதன் கீழே மயில் சிற்பமும் உள்ளன. மூலஸ்தானக் கோயிலினுள்ளேயே தெற்கு பார்த்தபடி வாலாம்பிகையின் கோயில் அமைந்துள்ளது. மூலஸ்தானத்துக்கு தெற்கே வைத்தியநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. கோயிலினுள் லிங்கமே வைத்தியநாத சுவாமியாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தின் உட் பிரகாரத்தில் வடமேற்கில் கிழக்கு நோக்கி உற்சவர் சந்நிதி உள்ளது. உற்சவமூர்த்தியாக வள்ளி தெய்வயானையோடு காணப்படும் ஸ்ரீசெல்வசிங்காரவேலர் விளங்குகின்றார்.


வெளிப்பிரகாரத்தில் கொடிக்கம்பத்தின் வடக்கும், தெற்குமாகக் கிழக்கு நோக்கியபடி ஸ்ரீஆறுமுக சுவாமி கோயிலும், விநாயகர் கோயிலும் அமைந்துள்ளன. மூலஸ்தானத்தின் வடக்குச் சுவரின் வெளிப்புறத்தில் நால்வர் மாடக்கோயில் வடக்குப்பார்த்து அமைந்துள்ளது. இம் மாடக் கோயிலிலேயே குருதேவர் சுப்பராயரின் திருவுருவச் சிலையொன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நால்வர் மாடக்கோயிலின் எதிரே சிவகாமி சமேதரான நடராஜரும், அவருக்கு முன் ஸ்ரீரத்தினசபாபதியும் கூடிய தெற்கு நோக்கிய கோயில் அமைந்துள்ளது. இச்சிறு கோயிலின் கண்ணாடி மாடப்புரையில் நடராஜர், சிவகாமசுந்தரி, இராமலிங்க சுவாமிகள், சுப்புராய சுவாமி ஆகியோர் திருவுருவச் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோயிலின் வெளிப்புற மதிலின் உட்புறம் வடமேற்கு மூலையில் சுவாமிக்கென பள்ளியறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.


மூலஸ்தானத்தின் வடக்கு வெளிப்புறச்சுவரையடுத்து தனிக்கோயிலில் மகிஷாசுரமர்த்தினி, ஸ்ரீதுர்க்காதேவியாக விளங்குகின்றாள். துர்க்கை கோயிலை ஒட்டி, கிழக்கில் தனியே தெற்குப் பார்த்த சிறு கோயிலினுள் ஸ்ரீசண்டிகேஸ்வரர் விளங்குகின்றார்.


கோயிலின் கிழக்கு சுற்றுச்சுவர் மதிலினுள் அமைந்த மாடப்புரைகளில் மேற்கு பார்த்தபடி சந்திரன், சூரியன், பைரவர் ஆகிய கடவுளரின் திருவுருவங்கள் அமைந்துள்ளன. இம்மாடப்புரைகளுக்குத் தெற்கில் யாகசாலையும் அதனையொட்டி மூலஸ்தானத்திற்கு நேர் பின்புறம் நவகிரகக்கோயில் தனியாகவும் அமைந்துள்ளது.


மூலஸ்தானத்தின் வடக்குச் சுவரின் வெளிப்புறத்தில் பிரம்மாவின் சிற்பமும், அதற்கு மேல் சத்திபுத்தியுடன் கூடிய விநாயகர் சிற்பமும் காணப்படுகின்றன. கிழக்குச்சுவரின் வெளிப்புறத்தில் மகாவிஷ்ணு சிற்பமும், அதற்கு மேல் தண்டபாணி கடவுள் சிற்பமும் விளங்குகின்றன. தெற்குச் சுவரின் வெளிப்புறத்தில் குருதேவர் சுப்பராயர் சுவாமிகளின் திருவுருவமும், அதற்குமேல் ரிஷிகளுடன் கூடிய ஸ்ரீதட்சிணாமூர்த்தி சிற்பமும் அமைந்துள்ளன.


வைத்தியநாதசுவாமி தனிக்கோயிலின் வடக்குச்சுவரின் வெளிப்புறம் அர்த்தநாரீஸ்வரர், கிழக்குச்சுவரின் வெளிப்புறம் ஸ்ரீஅண்ணாமலையார், தெற்குச்சுவரின் வெளிப்புறம் ரிஷிகளுடன் கூடிய ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆகிய கடவுளரின் திருவுருவச் சிற்பங்கள் மிக அற்புதமாகக் காணப்படுகின்றன.


நாள்வழிபாடும் விழாக்களும்


செவ்வாய்க்கிழமைதோறும் கோயிலில் மிகச்சிறப்பான வழிபாடுகளும், பூசைகளும் நடைபெறுகின்றன. கந்தர் சஷ்டி ஒருவார உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரமும் சிறப்பான திருவிழா.


இக்கோயிலுள்ள ஸ்ரீதுர்க்கை அம்மனுக்கு வெள்ளிக்கிழமை தோறும் இராகு காலத்தில் மிகச்சிறப்பான பூஜை வழிபாடு நடைபெற்று வருகிறது.


வாலாம்பிகை அம்மைக்கு பத்து நாட்கள் திருவிழாவாக ஆடிப்பூரம் பிரமோற்சவம் கொண்டாடப்படுகிறது.


பூசையரின் தனிச்சிறப்பு


கோயிலுக்குப்பூசை செய்யும் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் அனைவருமே நாள்தோறும் கோயிலுக்கு உணவு படைத்து பூசை செய்த பின்பே உணவு கொள்கின்றனர்.


செப்பு விக்கிரகங்கள்


வள்ளலார், பாலமுருகன், சண்டிகேஸ்வரர், நடராஜர், நால்வர். விநாயகர், வள்ளிதெய்வானை சமேத சண்முகர், சோமாஸ்கந்தர், தனி அம்மன், பாலாம்பிகை, சந்திரசேகரர், பிட்சாடனர், பிரதோஷ நாயகர், பழனியாண்டவர். சுப்பராய சுவாமிகள், உத்திராபதீஸ்வரர், துர்க்கை. அஷ்டதேவர், வீரபாகு தேவர், அருணகிரிநாதர், வள்ளி தெய்வானை


சமேத முத்துக்குமார சுவாமி, உற்சவ விநாயகர் ஆகிய பல தெய்வ செப்பு விக்கிரகங்கள் கோயிலில் தனியறையில் வைக்கப்பட்டுள்ளன.


கோயில் குளம்


குளம் கோயிலின் முன்னே நூறு மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. பிணி தீர்க்கும் குணம் கொண்ட தீர்த்தம் இது என்று பக்தர்களால் பாராட்டப்படுகிறது.


வள்ளலார் வழிபாடு


வள்ளற்பெருமானார் வழிபட்ட தலங்கள் மொத்தம் பதினேழாகும்.


அவை:


சென்னை கந்தகோட்டம் 1.


திருத்தணிகை 2.


சென்னை ஏழுகிணறு (துலுக்கானத்தம்மன் கோயில்) 3.


4. திருவொற்றியூர்


5. திருவலிதாயம்


6. திருஎவ்வளூர்


7. திருக்கண்ணமங்கை


8. கருங்குழி


9. வடலூர்


10. சிங்கபுரி (குறிஞ்சிப்பாடி)


11. திருமுல்லைவாயில்


12. புள்ளிருக்கு வேளூர் (வைதீசுவரன்கோயில்)


13. திருவாரூர்


14. திருவண்ணாமலை


15. திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)


16. திருவதிகை


17. திருத்தில்லை


ஆகிய தலங்களாகும்.


இத்தலங்களில் சென்னை கந்தகோட்டம், திருத்தணிகை, சிங்கபுரி ஆகியவை முருகப்பெருமான் குடிகொண்ட திருத்தலங்களாகும். சென்னை ஏழுகிணறு துலுக்கானத்தம்மன் கோயிற்கொண்டுள்ள திருத்தலம். திருவொற்றியூர், திருவலிதாயம், திருமுல்லைவாயில், புள்ளிருக்கு வேளூர், திருவாரூர், திருவண்ணாமலை, திருமுதுகுன்றம், திருவதிகை, திருத்தில்லை ஆகியவை சிவபெருமான் வீற்று அருள் செய்யும் திருத்தலங்களாகும். திருஎவ்வளூர், திருக்கண்ணமங்கை ஆகியவை திருமால் கோயில் கொண்டுள்ள திருத்தலங்கள்.


சென்னை கந்தகோட்டம், திருத்தணிகை, சென்னை ஏழுகிணறு, திருவொற்றியூர், திருவலிதாயம், திருஎவ்வளூர், திருகண்ணமங்கை ஆகிய தலங்கள் தம் இளம் வயதில் சென்னையிலிருந்த காலையில் இராமலிங்கரால் வழிபடப்பட்டவை. பிற்காலத்தில் பெருமானார் கருங்குழியில் வசித்தபோது வழிபட்டவையே மற்ற தலங்கள்.


வள்ளற்பெருமான் முருகன் மேல் இளம்வயது தொட்டே மிகுந்த பக்தி கொண்டவர். அந்த வடிவேலனின் அருளினாலேயே அவன் உபாசனையால் கலைஞானம் அனைத்தும் ஓதாதுணர்ந்தனர். பெருமானார் முதன் முதலில் வழிபட்ட தலமே முருகத் தலமாகிய சென்னை கந்தகோட்டமாகும். பின்னரே சிவத்தலமாகிய திருவொற்றியூரை வழிபட்டார். சென்னையில் வாழ்ந்த காலத்தில் திருத்தணிகையையும், கருங்குழியில் வசித்த காலத்தில் சிங்கபுரியையும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் பாடியருளினார்.


திரு.ச.மு.கந்தசாமி பிள்ளையவர்கள் இயற்றியருளிய இராமலிங்க சுவாமிகள் சரித்திர குறிப்புகள் என்னும் நூலில், அடிகளார் முருகப்பெருமான் மேல்கொண்ட பக்தியையும் அவனருளால் பெற்ற பேற்றையும் கூறுகிறார். அப்பகுதியை அப்படியே தருகிறோம்.


சபாபதிபிள்ளை தன் தம்பி இராமலிங்க பிள்ளைக்கு ஐந்தாம் பிராயத்தில் வித்தியாப்பியாசம் செய்வித்தனர். பிறகு சில காலம்


பொறுத்து, சபாபதி பிள்ளை தம்தம்பியைத் தன் ஆசிரியரான காஞ்சிபுரம் சபாபதி முதலியாரிடம் அழைத்துக்கொண்டு போய்க் கல்வியறிவு வளர்க்கும்படி வேண்டினர். நாலைந்துநாள் பாடஞ்சொல்லி வரும் போதே மாலையில் நாள்தோறும் பிள்ளைப்பெருமான் சென்னையில் கந்தசாமி கோயிலுக்குச் சென்று அருமையான பாடல்களைப் பாடிவருவதைக் கேள்வியுற்ற சபாபதி முதலியார் பிள்ளைப்பெருமானது கல்வித் திறத்தைக் கேள்வியுற்றுச் சாக்குப் போக்குகள் சொல்லி, பாடம் சொல்லாமலேயே காலதாமதஞ் செய்தனர்.


முயற்சியிலேயே பெரிதும் பிறகு பிள்ளைப்பெருமான் ஆலய வழிபாட்டிற்றிளைத்தலின் அருமை உணராது லௌகீக உழன்றுகொண்டிருந்த சபாபதிபிள்ளை, தன் தம்பி படிக்காமல் திரிகின்றார் என்று சிலரிடம் குறை கூறினர். அதைக்கேள்வியுற்ற பிள்ளைப்பெருமான் அன்று மாலை முதல் படிப்பதாக கூறிப்போய், பூ, பழம், தேங்காய்,ஊதுவர்த்தி முதலிய வாங்கி வந்து தம் வீட்டின் மெத்தை அறையில் ஓர் கண்ணாடியைச் சுவரில் மாட்டித் திருவிளக்கேற்றி மலர்ச்சூட்டிப் பழம் படைத்துக் கற்பூர தீபங் காட்டி நெடுநேரம் அக்கண்ணாடியை நோக்கின வண்ணமாய்த் தியானித்தார். அன்று அக்கண்ணாடியில் தணிகை முருகப் பெருமான் திருவுருவம் தோன்ற அன்று முதல் அவ்வுருவ உபாசனை தொடங்கினர். முருகக்கடவுள் உபாசனையால் கலைஞானம் அனைத்தும் ஓதாதுணர்ந்தனர்.


இவ்வாறாக வள்ளலார் முருகப்பெருமான் மீது பேரன்பு பூண்டு பதிகங்களும் பாடியருளினார். கந்த கோட்டம், திருத்தணிகை ஆகிய முருகத் தலங்களைப் பாடியருளியதுபோல், பின்னார் கருங்குழியில் வாழ்ந்த காலத்தில் சிங்கபுரியையும் போற்றிப் பதிகம் பாடியுள்ளார்.


1858-ம் ஆண்டு தொடங்கி சிதம்பரத்தையெல்லாம் வழிபட்டுக்கொண்டு, கருங்குழியில் வந்து தங்கினார் அடிகளார். கருங்குழியில் தங்கியிருந்த காலையில், அங்கிருந்து அடிக்கடி


புறப்பட்டுச் சென்று அருகில் உள்ள தலங்களையெல்லாம் தொழுது போற்றி வருவார். சிங்கபுரிக்கும் அவர் அடிக்கடி சென்று தொழுது வருவது வழக்கம். ஒரு சமயம் இராமலிங்க அடிகளாரின் சோதரர் சபாபதி பிள்ளையின் நோய் தீரவேண்டி, சிங்கபுரி சென்று கந்தவேல் மேல் கந்தர் திருப்பதிகம் பாடியருளினார்.


இப்பதிகம், முருகவேள் திருப்பாசுரங்கள் என்னும் தலைப்பின் கீழ் தனிப்பாசுரப் பகுதியில் திரு.ஆ.பாலகிருஷ்ணபிள்ளை பதிப்பில் காணப்படுகிறது.


மேலும் இப்பதிக வரலாறு பின் குறித்தபடி ஓர் நோட்டுப் பிரதியில் காணப்படுகிறது. இஃது ரக்தாக்ஷி வருடம் சித்திரை மாதம் உசு சுக்கிர வாரம் கார்த்திகை நக்ஷத்திரம் சகோதரர் சபாபதி பிள்ளையின் ரோக நிவாரணார்த்தம் சி.இராமலிங்கபிள்ளையவர்களாலியற்றியது என்றும், 1892 ஆம் ஆண்டு அருட்பாப் பதிப்பில் இது முதல் முதல் வெளிவந்தபோது, குறிஞ்சிப்பாடிக்கு அடுத்துள்ள சிங்கபுரிக் கந்தர் பதிகம் என்ற தலைப்போடு அச்சிடப்பட்டிருக்கிறது என்றும், மேற்படி சித்திரை மாதம் உசு க்குச் சரியான ஆங்கில நாள் 6-5-1864 என்றும் இப்பதிகம் பற்றி திருஅருட்பாவின் அடிக்குறிப்புச் சொல்கிறது.


இனி, சிங்கபுரிவாழ் சிங்காரவேலர் மீது வள்ளலார் பாடியருளிய கந்தர் திருப்பதிகத்தைக் கீழே தருகிறோம். நாள்தோறும் பாடிக்கந்தர் அருள் பெறுவீராக.








Post a Comment

0Comments
Post a Comment (0)